அமெரிக்கா ஈரான் மீது தொடுத்த தாக்குதல்களை 6ஆம் நாளாக தொடர்ந்து தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் இராணுவ திறனை பலவீனப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த தாக்குதல்கள், பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
அமெரிக்க ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, புதிய அலை தாக்குதல் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. ஈரானின் பல்வேறு இராணுவ தளங்கள், ஏவுகணை நிலைகள் மற்றும் உத்தியோகபூர்வ இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடைபெற்றன. இதுவரை ஈரான் தரப்பில் உடனடி பதில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்றாலும், ஈரானிய வட்டாரங்கள் விரைவில் வலுவான எதிர்தாக்குதல் தொடங்கும் என எச்சரித்துள்ளன.
அமெரிக்கா-இஸ்லாமிய நாடுகள் இடையிலான பதற்றம் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் முன்னணியில் நின்று அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இணைந்து அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய நாணய அமைப்பை உருவாக்க முயற்சி, ரஷ்யாவுடன் இணைந்து அதிநவீன ஆயுதங்கள் உருவாக்கம், அமெரிக்காவை புறக்கணித்து சுயாதீன வெளியுறவு கொள்கை, அரபு நாடுகளில் அமெரிக்க எதிர்ப்பை ஊக்குவித்தல், யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் டிரம்ப் நிர்வாகத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.
இந்தப் பின்னணியில் இஸ்ரேலை முன்னிலைப்படுத்தி ஈரான் மீது முதலில் மறைமுக தாக்குதல்களை நடத்திய அமெரிக்கா, பின்னர் நேரடியாக போர்க்களத்தில் இறங்கியது. இந்த மோதல் முழு அரபு உலகையும் பாதித்தது. கச்சா எண்ணெய் உற்பத்தி முற்றிலும் நின்றுபோன நிலையில், ஏற்கெனவே ஏற்றுமதிக்கு தயாரான டேங்கர்கள் ஹார்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்டன. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 முதல் 30 சதவீதம் வரை இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், ஈரான் இதன் முழு கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்கா இந்த நீரிணையை மீட்டெடுக்க முயற்சித்தபோது போர் மேலும் விரிவடைந்தது. சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் பேரில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தையும், எண்ணெய் சந்தையையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. ஈரான் தரப்பு தனது உரிமைகளை உறுதியுடன் பாதுகாக்கும் என உறுதியளித்துள்ளது. உலக நாடுகள் உடனடி போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தி வருகின்றன.
