திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) சுமார் 13.3 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை தற்போது மறுபரிசீலனைக்கு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சுமார் ரூ.2,100 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த இந்த திட்டத்தின் மொத்த செலவையும் மீள மதிப்பீடு செய்யும் நடவடிக்கையும் அரசு தரப்பில் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முன்னதாக வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்யும் வாய்ப்பும் இருக்கலாம் எனவும் அதிகாரிகள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயர்மட்ட மேம்பால திட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு சராசரியாக சுமார் ரூ.157.89 கோடி செலவாகும் என ஆரம்ப கட்ட மதிப்பீடு குறிப்பிடுகிறது. இதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மதுரவாயல்–வெளிவட்டச் சாலை தேசிய நெடுஞ்சாலையில் முன்மொழிந்துள்ள ஆறு வழிச்சாலை உயர்மட்ட பாலத் திட்டத்தில் ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ.147 கோடி மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த இரு திட்டங்களின் செலவு வேறுபாடு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

செலவுக்கூறு அதிகமாக இருப்பது, திட்ட வடிவமைப்பு மற்றும் கட்டுமான முறைகள் குறித்து கூடுதல் ஆய்வு தேவைப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை கருதுவதாக கூறப்படுகிறது. அதனால், திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், நிலம் கையகப்படுத்தும் செலவு, கட்டுமான தரநிலைகள் உள்ளிட்டவை மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் தொடர்பாக கடந்த மாதம் 29 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திட்டத்தின் தற்போதைய நிலை, செலவுக் கணக்குகள் மற்றும் செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது திட்டத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய மறுபரிசீலனை முடிவு அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. திட்டத்தின் இறுதி வடிவம் மற்றும் செயல்படுத்தும் கால அட்டவணை மீதான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version