மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார்.

சென்னை: தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூடிய இந்தக் கூட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் செயல்திட்டங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றியபோது, சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி பணபலத்தை முறியடித்து தமிழக மக்கள் தவெகவுக்கு அளித்த பெரும் ஆதரவை சுட்டிக்காட்டினார். இது உண்மையான மக்கள் எழுச்சியைப் பிரதிபலிப்பதாகவும், ஜனநாயகத்தின் வெற்றியாகவும் அமைந்துள்ளது என்று வலியுறுத்தினார். மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் மீனவர் நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய அரசு செயல்படும் என்பதை ஆளுநர் உறுதிப்படுத்தினார்.

திருவள்ளுவரின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கைப்படி சமத்துவம் மற்றும் சமதர்மத்தை நிலைநாட்டுவதில் அரசு உறுதியுடன் இருக்கும் என்ற அறிவிப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் “மக்களாட்சியில் மக்களே மன்னர்கள்” என்ற மணிவாசகத்தை நினைவுகூர்ந்த ஆளுநர், இந்த அரசு மக்களுக்கான அரசாகவே செயல்படும் என்பதை தெளிவாக்கினார். 2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றும் இலக்குடன் “வெற்றி தமிழகம்” என்ற தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

இருமொழிக் கொள்கை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதை ஆளுநர் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்தின் நியாயமான குரலை ஒங்கி ஒலிக்கச் செய்யவும் புதிய அரசு தொடர்ந்து போராடும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.அரசு நிர்வாகத்தில் நிலவும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை அடியோடு ஒழிக்கவும், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கனிம வளங்களின் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, அரசின் வருவாயைப் பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். மதுபான உற்பத்தியாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரி வருவாய் 1,000 கோடிக்கு மேல் அரசுக் கருவூலத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது நிதி மேலாண்மையில் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

மத்திய அரசின் நிதிப் பகிர்வில் பாரபட்சம் இருந்தபோதிலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்புடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இயந்திரத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவது, தொழில் தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சமூக நீதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசின் தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளையும் ஆளுநர் உரை தெளிவாகப் பிரதிபலித்துள்ளது. இந்த உரை தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டியாக அமையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version