தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான கே. அண்ணாமலை, ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மூன்றாவது வாரத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பிரமாண்டமாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அந்தத் தேர்தலின்போது அதிமுக-பாஜக கூட்டணியின் பிரசாரத்தில் அவர் பெரிய அளவில் ஈடுபடவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் பாஜகவில் இருந்து அவர் விலகினார். அதன்பிறகு, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை அரசியல் களத்தில் இறக்கி, புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே 10 லட்சம் பேர் இணைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது முகாம்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த இயக்கம், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12-ம் தேதி பொள்ளாச்சியில் அண்ணாமலை நடத்திய மாநாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இரண்டாவது மாநாடு நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு, புதிய கட்சியை வலுவாக தயாரிக்கும் பணிகளில் அண்ணாமலை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார்.
வரும் செப்டம்பர் 14-ம் தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிவிப்புக்கு முன்பாக, தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்’ தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த ஆலோசனைகள் மூலம் தொண்டர்களின் கருத்துகளைப் பெற்று, கட்சியை மக்கள் நலன் சார்ந்த வகையில் வடிவமைக்க அண்ணாமலை முயற்சி எடுத்து வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து அல்லது வலுவான கூட்டணியுடன் களம் காணும் நோக்கில் இந்தப் புதிய கட்சி தொடக்கம் அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அண்ணாமலையின் இந்த நகர்வு தமிழக அரசியல் சமன்பாட்டில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
