மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. கமல், அபிராமி, சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் கலந்து கொண்டிருந்தார்.
மேடையில் பேசிய கமல்ஹாசன் ”தமிழில் இருந்து தோன்றியது தான் கன்னடம்” என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவரது தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகது என கர்நாடக திரைப்பட சம்மேளனத் தலைவர் நரசிம்மலு தெரிவித்திருந்தார். ”தவறு செய்தால் தானே மன்னிப்பு கேட்க வேண்டும், நான் தவறான ஒரு கருத்தை கூறவில்லை ஆகையால் மன்னிப்பு கேட்க முடியாது” என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”கர்நாடகாவில் தானே தக் லைப் படம் வெளியாகாது. உலகம் முழுவதும் 13 கோடி பேர் தமிழர் பரவி இருக்காங்க. கன்னடம் மொழி பற்றி பேசியதால் கமல்ஹாசனின் படத்தை தடுக்கறீங்க. தம்பி, விஜய் என்ன பண்ணாரு. அவர் படத்திற்கு எதுக்கு தடை விதித்தீர்கள். உங்களுக்கு தமிழர் என்றாலே ஒரு வெறுப்பு”.
”அதே கர்நாடகாவில் இருந்து வந்த ஈ.வெ.ரா.,வுக்கு தமிழ் என்றாலே வெறுப்பா இருக்கு. சனியன் தமிழை ஒழிங்க என்றார். ஆனால், கன்னடரான அவரை நாங்க தமிழர் தலைவரா ஏற்க வேண்டும். எப்படி இருக்கு பாருங்க. தமிழ் என்றாலே அவ்வளவு கசப்பு, அருவருப்பா இருக்கு அவங்களுக்கு. தமிழில் இருந்து பிறந்த மொழி என்பதை ஏன்ற வரலாற்றை ஏற்கவே கன்னடர்களுக்கு வெறுப்பா இருக்கு”.
”நாங்க தமிழர்கள். எங்களின் தோற்றுவாய் எது, எங்களுடைய தொடக்கம் எது, மொழியின் தொடக்கம் எது என்று வரலாற்று பூர்வமாக சொல்றோம். அதைப் போலவே, கன்னட மொழி எப்போது தோன்றியது, கன்னடம் இனம் எந்த காலகட்டத்தில் தோன்றியது என்பதை வரலாற்று பூர்வமாக சொல்லுங்க? அவங்களுக்கு ஒரு பிரச்னை பண்ண வேண்டும். அதற்காக, இப்படி பண்ணுகிறார்கள், எனக் குற்றம்சாட்டினார்”.