தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியதாகவும், வருவாய்ப் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
மேலும், திமுக ஆட்சியில் வருவாய் உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் நிதிச் சுமை அதிகரித்ததாகவும், மூலதனச் செலவினங்கள் குறைந்ததால் வளர்ச்சிக்கான முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கைகளில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வாணவேடிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையையும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையையும் மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.
மேலும், “மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் இறங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், தங்களின் தோல்விகளை மறைக்கும் ‘Escapism’ முயற்சியாகவே இந்த வெள்ளை அறிக்கை நாடகம் நடத்தப்பட்டுள்ளது. பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த அறிக்கை இறுதியில் ‘ஹைப்’ ஏற்றப்பட்ட ‘ஃப்ளாப் ஷோ’வாகவே மாறியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கத்தை விரைவில் அளிப்பேன் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

