அதிமுக எம்.எல்.ஏ-க்களாகப் பதவியேற்று, பின்னர் தங்களது பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்று 4 பேருக்கும் விளக்கம் கேட்டு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதனிடையே 25 பேரில் 21 எம்.எல்.ஏ-க்கள் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரியதையடுத்து, அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி கைவிட்டார். இதுகுறித்து முறைப்படி சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரும் இதனை ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி),  சத்யபாமா (தாராபுரம் தொகுதி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதி) ஆகிய 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர். இவர்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஏற்றுக் கொண்டதையடுத்து, அந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.

தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, ராஜினாமா செய்த 4 பேருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுக தலைமை அளித்த தகுதி நீக்கப் புகார் நிலுவையில் இருந்த போதே இவர்கள் அவசர அவசரமாகப் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்றும், தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த முடிவை எடுத்தீர்களா என்றும் இதற்கு 7 நாளில் விளக்கம் அளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version