தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்ளிறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். இதுவே கள்ளின் நன்மை, தீமை, தேவை உள்ளிட்டவை பற்றிய கேள்விகளைச் சமூக ஊடகங்களில் எழுப்பியிருக்கிறது. கள் உண்மையிலேயே உடலுக்கு நல்லதா? அரசு ஏன் கள் விற்பனைக்கு அனுமதி தர மறுக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடும் கள்ளும்
தமிழ்நாட்டின் வரலாற்றில் கள்ளுக்குத் தனியிடம் உண்டு. புளிப்பு என்ற பொருள் கொண்ட கடுத்தல் என்ற சொல்லிலிருந்துதான் கள் பிறந்தது என வேர்ச்சொல் ஆராய்ச்சி காட்டுகிறது. மன்னர்கள் முதல் மக்கள் வரை அந்நாட்களில் கள்ளுண்டு களித்த செய்திகளைச் சங்கத்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. பரிசாகவும் படையலாகவும் கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் கள் உண்பதைக் கொடுஞ்செயலாக அறம் போதிக்கும் நீதி நூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தையே வகுத்திருக்கிறார். பனைக்குத் தாளில் என்ற பெயரும் உண்டு. அதிலிருந்து கிடைக்கும் கள், தாளி என்று அழைக்கப்படுகிறது. அதுவே தாரி – தாடி எனத் திரிந்து வடமொழியில் தாரு என்றும் ஆங்கிலத்தில் Toddy என்றும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கள் எப்போது தடை செய்யப்பட்டது?
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து எடுக்கப்படும் கள் மட்டுமின்றி சுண்டுசொறு, சுண்டக்கஞ்சி, சாராயம், பழந்தேறல் எனப் பல வகையான மதுபானங்கள் தமிழ்நாட்டில் புழங்கின. இதற்கிடையே ஆங்கிலேயர் வருகையால் வெளிநாட்டு மதுபானங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இதற்கிடையில் 1930-ம் ஆண்டு காந்தியடிகள் மதுவிலக்கை அமல்படுத்த கள்ளுக்கடை மறியல் போராட்டங்களை முன்மொழிந்தார். அதன் விளைவாக காங்கிரஸ் தலைமையில் இயங்கிய சென்னை மாகாணத்தில், 1937-ம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி உள்நாட்டு மதுபானங்களான கள், சாராயம் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது. பனை, தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கினாலோ, விற்றாலோ, அருந்தினாலோ சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டது. மீறினால் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என்று Tamil Nadu Prohibition Act 1937-ன் 4-ம் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளை ஏன் தடை செய்தார்கள்?
பனை மரத்தின் உச்சியில் உருவாகும் பாளை சீவப்பட்டு, அதிலிலிருந்து வடியும் நீர் சேகரிக்கப்படுவதே பனங்கள்ளு எனப்படுகிறது. இயற்கை முறையில் உருவாகும் இதனை அதிகம் குடித்தால் ஓரளவு போதை ஏற்படும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டும் இடையில் நீக்கப்பட்டது. அப்போது கள் விற்பனை அதிகரித்தது. கள்ளில் அதிகமான போதை ஏற்றுவதற்காக குளோரல் ஹைட்ரேட் உள்ளிட்ட ரசாயண வேதிப் பொருட்களைக் கலந்து விற்றதாகக் கூறப்பட்டது. இதனாலேயே 1987-ம் ஆண்டு கள் இறக்குதல், விற்றல் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது.
கள் உடலுக்கு நல்லதா?
பொதுவாக 4%-க்கு மேல் ஆல்கஹால் இருக்கும் மதுபானத்தைத் தொடர்ந்து உட்கொண்டால் உடலில் மோசமான விளைவுகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. மனித உடலில் கள்ளால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கிடக் கேரளா பல்கலைக்கழகத்தின் பயோ மெட்ரிக் துறை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், கள்ளில் 5% – 10% ஆல்கஹால் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பல ஆண்டு காலக் கள் பழக்கம் நினைவாற்றலை வெகுவாகப் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. கள்ளை எலிகளுக்குக் கொடுத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், உள்ளுறுப்புகள் பல பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவு கூறுகிறது.
பனையின் மருத்துவ குணங்கள்
கள்ளை அதிகப்படியாக உட்கொண்டால் பல பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் கள்ளைத் தவிர பனை மரம் தரும் மற்ற பொருட்கள் அனைத்தும் மிகுந்த மருத்துவ குணம் உள்ளவையாகச் சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. பனங்கள்ளை 100 – 200 மில்லி லிட்டர் அருந்தினால் உடல் குளிர்ச்சி அடையும். வயிற்றுப் புண் ஆறும். சுண்ணாம்பு சேர்த்து தெளிய வைத்த கள், பதநீர் எனப்படுகிறது. அது வெயில்காலங்களில் உடல் சூட்டைத் தணித்து, நீர்ச்சத்தை அதிகப்படுத்தும். நுங்கு, கருப்பட்டி, பனங்கொட்டை, பனங்கிழங்கு உள்ளிட்ட பனையின் அனைத்துப் பொருட்களும் இயற்கையிலேயே மருத்துவக் குணங்கள் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
கள்ளிறக்குதல் ஏன் மறுக்கப்படுகிறது?
தென்னை மற்றும் பனை மரங்களில் தொடர்ச்சியாகக் கள் உற்பத்தி செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் நுங்கு, தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்களின் காய்ப்பு பொய்த்துவிடும் என்று கூறப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் கள்ளிறக்க முடியும் என்று விவசாயிகள் சிலர் கூறுகின்றனர். இயற்கையான கள்ளை எடுக்க இவ்வளவு சிரமங்கள் இருப்பதால், கள் விற்பனையில் கலப்படம் நடக்கிறது. ஸ்பிரிட், க்ளோரல் ஹைட்ரேட், வெள்ளை நிற சாந்து, டையாஸ்பாம் மாத்திரை போன்ற உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பல பொருட்கள் உடனடி போதைத் தன்மை கலப்பதற்காகச் சேர்க்கப்படுகிறது. இதனாலேயே கள்ளிறக்க அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.