இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சவராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற சாதனை படைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூ.ட்டணி, மீண்டும் ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக அதிக முறை பதவியேற்ற, அவரின் சாதனை நிகழ்வை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இதனை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார். பீகாரின் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிப்பதாக தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனநாயக பயணத்தில் இது உண்மையிலேயே அரிய சாதனை என்று கூறியுள்ளார். நிதிஷ்குமாரின் அசைக்க முடியாத பொது சேவை, நிலையான நிர்வாகம் மற்றும் பீகார் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் என்று சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.
அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் பட்டியலில், நிதிஷ் குமார் 8வது இடத்தில் உள்ளார். அவர், 19 ஆண்டுகளை கடந்து முதலமைச்சராக பதவி வகிக்கிறார். இந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பவர் சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங். இவர் 24 ஆண்டுகள் 165 நாட்கள் முதலமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
