டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் பயங்கரமாக வெடித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக NIA நடத்திய விசாரணையில் காரை வெடிக்கச் செய்தது, மருத்துவர் உமர் நபி என்பதும், பின்னணியில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கடந்த அக்டோபர் மாதம் ஜம்மு- காஷ்மீரில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனிடையே ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவப் பல்கலைக்கழக வளாகம் அருகே பதுக்கி வைத்திருந்த 360 கிலோ வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருந்தநிலையில், டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்தநிலையில், இந்த தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை துவக்கியதும் உமர் நபி ஓட்டிச் சென்ற காரின் உரிமையாளர் அமிர் ரஷீத் அலி மற்றும் ஜசீர் பிலால் வானி என்ற டேனிஸ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்தநிலையில், கார் குண்டு வெடிப்பு வழக்கில் முசாமில் ஷகீர், அதீல் அகமது, ஷாகீன் சயீத் மற்றும் முப்தி இர்பான் அகமது வாகே ஆகியோரை NIA அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அனைவரையும் ஆஜர்படுத்திய NIA அதிகாரிகள், கார் குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேருக்கும் முக்கிய பங்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர். கைதான 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியநிலையில், அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க NIA-வுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
