மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடி நிலச்சரிவு துயரத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. குடும்பத்தினரும்,உறவினர்களும் கல்லறைகளில் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை அருகே பெட்டிமுடியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நான்கு தொடர் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்தது. தூங்கிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 70 பேர் உயிரிழந்தனர். இதில் 66 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த துயர தினத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் ராஜமலையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிலச்சரிவு பேரழிவில் சிக்கி உயிரிழந்த தங்கள் அன்புக்குரியவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராஜமலைக்கு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என திரளானோர் வந்திருந்தனர்.
காலையில் துவங்கி இரவு வரை, கல்லறைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உணவு, பழங்கள், வளையல்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பிரியமான பிற பொருட்களை படைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தோரின் ஆன்மா சாந்திக்காக சர்வ மத பிரார்த்தனையும் நடந்தது குறிப்பிடத்தக்கது……