பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தின் ஷீட்லா கோவிலில் பிரார்த்தனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலில் கூடியதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பலர் நசுக்கப்பட்ட நிலையில் இந்தச் சோக சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துயரச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், காலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். “பிரார்த்தனைகள் சுமுகமாக நடந்துகொண்டிருந்தன. கூட்ட நெரிசல் எப்படித் தொடங்கியது என்று யாருக்கும் புரியவில்லை. மக்கள் எல்லா திசைகளிலும் ஓடத் தொடங்கினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகளும் முறையான வரிசைகளும் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியாளர்களும் இருந்தனர். ஆனால் யாரோ ஒருவர் பதற்றத்தை ஏற்படுத்த, மக்கள் முண்டியடிக்கத் தொடங்கினர். இந்தத் திருவிழா பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது, வழக்கமாக எல்லாம் சுமுகமாகவே நடக்கும். இந்த முறை கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை,” என்று கூறினார்.
மேலும் இதுபோன்ற கூட்டங்கள் வழக்கமானவை என்றாலும், இந்த அளவிலான ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். கூட்ட நெரிசலுக்கான சரியான காரணத்தையும், இதில் ஏதேனும் சதி உள்ளதா என்பதையும் கண்டறிய காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமான ஒன்பது பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். இந்துக்களுக்குப் புனிதமான நாளான ஏகாதசி அன்று, கோவிலில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
