மருத்துவக் கல்லூரிகள் மருந்துச் சீட்டு நடைமுறைகளைக் கண்காணிக்கவும், தெளிவான கையெழுத்தை உறுதி செய்யவும் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம்(NMC) உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்களால் மருந்துச் சீட்டுகளைப் படிக்க முடியவில்லை என்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. இதனால் மருந்தகத்தில் இருந்து பெறப்படும் மருந்து மருத்துவர் பரிந்துரைத்த மருந்துக்கு இணையானதா என்பதைக் கண்டறிவது கடினமாகிறது. சில நேரங்களில், மருந்தாளுநர்களால் கூட மருத்துவரின் கையெழுத்தைப் புரிந்துகொள்ள முடியாது. தவறான மருந்து வழங்கப்பட்டால், அது நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். இதைக் கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதாவது, மருத்துவர்களின் மருந்துச் சீட்டுகள் தெளிவாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தேசிய மருத்துவ ஆணையம் (NMC), மருத்துவக் கல்லூரிகளை கண்காணிப்பதற்காக ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறப்புக் குழு, மருந்துச் சீட்டு நடைமுறைகளைக் கண்காணித்து, MBBS பாடத்திட்டத்தில் ‘மருத்துவ மருந்துச் சீட்டுகளில் தெளிவான கையெழுத்தின் முக்கியத்துவம்’ என்பதைச் சேர்ப்பதை மேற்பார்வையிடும்.
இதுதொடர்பாக, மாநில முதன்மை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், NMC- யின் முதுகலை மருத்துவக் கல்வி வாரியம் (PGMEB) , “ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும், மருந்துச் சீட்டுகளைக் கண்காணிப்பதற்கும், சட்டப்பூர்வ, ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறைத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும், மருந்துகள் மற்றும் சிகிச்சைக் குழுவின் (DTC) கீழ் ஒரு பிரத்யேக துணைக் குழுவை நிறுவ வேண்டும்” என்று கூறியுள்ளது.
ஜெனரிக் பெயர்களைக் கொண்ட மருந்துகளை தெளிவாகவும், முன்னுரிமையாக பெரிய எழுத்துக்களிலும் பரிந்துரைக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
NMC உத்தரவின்படி, நோயாளிகளின் பாதுகாப்பை பாதிக்கும் என்பதால், தெளிவற்ற முறையில் மருந்துச் சீட்டு எழுதுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருந்துச் சீட்டுகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும். மருத்துவ மாணவர்களுக்கு தெளிவான மருந்துச் சீட்டுகளை எழுதுவதன் முக்கியத்துவம் கற்பிக்கப்படும், மேலும் இது அவர்களின் மருத்துவப் பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்கும். இந்தப் பழக்கத்தை தங்கள் படிப்பின் போது வளர்த்துக் கொள்வதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்
