ஆளும் கட்சியில் உள்ள பாஜக தலைவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளை கூறும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சமீபகாலத்தில் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியினர் என்றால், அவர்கள் என்றோ பேசியதன் அடிப்படையில் அவர்களை செயல்பட விடாமல் தடுக்க அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படுகிறது.
அந்த வகையில், 2018-ம் ஆண்டு அன்றைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சி எம்பி., ரகுல்காந்தி, அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ராகுலின் அந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் பல கண்டனங்கள் எழுந்தனர்.
பாஜகவின் பிரதாப் கட்டியார், ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, பாஜக பிரமுகர் அளித்த அவதூறு வழக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
பலமுறை சம்மன் அனுப்பியும், இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அதே சாய்பாசா நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணையில், ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூன் 26-ம் தேதி நேரில் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.
