புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுச்சேரியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான G. நேரு (எ) குப்புசாமி தலைமையிலான “நேயம் மக்கள் கழகம்”, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கரம் கோர்த்துள்ளது. இந்தத் திடீர் கூட்டணி அறிவிப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, தவெக-வுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்த நேயம் மக்கள் கழகத்திற்கு, தவெக ஏற்கனவே அறிவித்திருந்த 30 தொகுதிகளில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நேயம் மக்கள் கழகம் போட்டியிடும் என தவெக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர் விஜய்யின் முழு ஒப்புதலோடு இந்தத் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றுதான் புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும் தவெக தனது வேட்பாளர்களை அறிவித்திருந்தது. தற்போது கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால், ஏற்கனவே அந்த இரு தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்த தவெக வேட்பாளர்களுக்குப் பதிலாக, நேயம் மக்கள் கழக வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள் எனத் தெரிகிறது. ஒருபுறம் திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் மோதல் நிலவி வரும் வேளையில், தவெக லாவகமாக ஒரு கூட்டணியை அமைத்து தனது தேர்தல் பலத்தைப் பெருக்கியுள்ளது அரசியல் விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
