குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழந்தனர். பயிற்சி மருத்துவர்கள் 60 பேர் வரை உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனின் காட்விக் விமானநிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.37 மணிக்கு புறப்பட்டது. 825 அடி உயரம் பறக்கும் வரை விமானம், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கும் மேலேபோக விமானி முயற்சித்துள்ளார். ஆனால் அது பலனளிக்காததால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்துள்ளார். அதற்குள்ளாக விமானம் 400 அடி உயரம் அளவுக்கு தடாலடியாக கீழிறிங்கியது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் தந்தபோது அங்கிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
அதாவது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாக மேகானி என்ற குடியிருப்பு பகுதியில் அங்கிருந்த பி.ஜே.என்ற மருத்துவக்கல்லூரி உணவு விடுதி கட்டிடத்தின் மீது விமானம் பலத்த சத்தத்துடன் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை, பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அவர் உத்தரவிட்டார்.
90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் காந்திநகரில் இருந்து விமான விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தன. மொத்தம் மூன்று குழுக்கள் வதோதராவில் இருந்து அகமதாபாத்திற்கு சென்றன.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உயிர் பிழைத்து வெளியே வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும் பி.ஜே.மருத்துவமனையில் அந்த நேரத்தில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டிடம் முழுவதும் உருக்குலைந்ததால் உள்ளே 60-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கக் கூடும் என தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.
