நாடு முழுவதும் விமானக் கட்டணங்களை வரம்பிட முடியாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே இண்டிகோ சேவை முடங்கியதால் நாடு முழுக்க விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் விலையைத் தாறுமாறாக உயர்த்தியது. பல ரூட்களில் வழக்கத்தை விடப் பல மடங்கு அதிக விலைக்கு விமான டிக்கெட்கள் விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசு, டிக்கெட் உச்சவரம்பை நிர்ணயம் செய்தது. இதற்கிடையே ஆண்டு முழுக்க விமான டிக்கெட்களுக்கு உச்ச வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே விமான டிகெக்ட்களுக்கு உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதிலளித்தார்.
அப்போது, நாடு முழுவதும் விமானக் கட்டணங்களை வரம்பிட முடியாது என்று கூறினார். மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்காது என்பதைச் சுட்டிக்காட்டிய ராம் மோகன் நாயுடு, இதன் மூலம் பயணிகளுக்கே அதிக நன்மை கிடைக்கும் எனக் குறிப்பிட்டார். அதிக தேவை காரணமாக பண்டிகைக் காலங்களில் டிக்கெட் விலைகள் பொதுவாக உயரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, ஆண்டு முழுவதும் எந்தவொரு துறைக்கும் விலைகளை மட்டுப்படுத்த முடியாது. தேவை மற்றும் விநியோகம் தானாகவே விமானக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், இது விமான நிறுவனங்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் குறிக்காது என்று நாயுடு தெளிவுபடுத்தினார். தேவைப்பட்டால் விமானக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தவும், இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து பயணிகளைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு இன்னும் போதுமான அதிகாரங்கள் உள்ளன.
