இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் 78வது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 58 கோடி பேர் பயன் பெறுவதாகவும், தற்போது, இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களையும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆயிரக்கணக்கான சுகாதார மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அங்கு பரிசோதனை செய்வதுடன், புற்றுநோய், நீரிழிவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை ஆரம்பநிலையில் கண்டறியப்படுவதாக தெரிவித்தார். லட்சக்கணக்கான மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாளம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதன் மூலம், ஒருங்கிணைந்த பலன்கள், காப்பீடு, ஆவணங்கள் மற்றும் தகவல்களை பெற முடிவதாகவும் குறிப்பிட்டார்.
ஜூன் 11ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டத்தில் அனைத்து நாடுகளையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற மையக்கருத்து அடிப்படையில் இந்தாண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிக்க: பொற்கோயிலில் அதிகரிக்கப்பட்ட வான்பாதுகாப்பு.. இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல்!!
நாடு முழுவதும் உள்ள பொது மருந்தகங்கள், தரமான மருந்துகளை சந்தையை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்வதால், அத்தியாவசிய மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.