பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக நடத்தப்பட்ட வெற்றிப்பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பதவி விலக வேண்டும் கர்நாடக பாஜக வலியுறுத்தி உள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. இதன்மூலம் 18 ஆண்டுகால சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஏக்கத்தை ஆர்சிபி தீர்த்துக் கொண்டது. இதனை நாடு முழுவதும் உள்ள ஆர்சிபி ரசிர்கள் நேற்றிரவு முதல் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த கர்நாடக அரசும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் திட்டமிட்டன. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக பெங்களூர் விதான் சௌதா கட்டிடத்தில் இருந்து சின்னசாமி ஸ்டேடியம் வரை வீரர்களை பேருந்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு வருவதும் என்றும் முடிவானது.
ஆர்சிபி வீரர்களை பார்க்க காலை முதலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குவிய ஆரம்பித்தனர். குறிப்பாக கேட் 6,7,12 ஆகிய நுழைவு வாயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களை பெரும் போராட்டத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மாநில முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா அளித்துள்ள பேட்டியில், இது அரசாங்கத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். ஒருபுறம் மக்கள் உயிரிழந்துள்ளனர், மறுபுறம் வெட்கமின்றி கொண்டாட்டங்களை தொடர்கிறார்கள். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் பேசாதது ஏன்? அடிப்படை ற்பாடுகள் மற்றும் போலீஸ் படை அங்கு இல்லை. இதற்கு யார் பொறுப்பு? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.