சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் அமைப்பு ரீதியான தயார்நிலை மற்றும் தேர்தல் உத்தி, கூட்டணி பங்கீடு தொடர்பாக குறித்து விவாதிக்க தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இன்று தமிழகம் வரவுள்ளார்.
சமீபத்தில் தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், செவ்வாய்க்கிழமையான இன்று சென்னைக்கு வருகை தரவுள்ளார். இந்த பயணத்தின்போது, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முறைப்படி தொடங்க உள்ளார். இது, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக பாஜகவின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
பாஜக வட்டாரங்களின்படி, இந்த பயணத்தின்போது, கோயல், தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கலந்தாலோசனைகளின்போது, கட்சியின் அமைப்பு ரீதியான தயார்நிலை மற்றும் தேர்தல் வியூகம் குறித்து கேட்டறிவார். மேலும் வாக்குச்சாவடி நிலை வலுப்படுத்துதல், பிரச்சார வடிவமைப்பு மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, அவர் எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்திந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதிப் பங்கீட்டு ஏற்பாடுகள் மற்றும் என்.டி.ஏ கூட்டணியின் பரந்த கட்டமைப்பு ஆகியவை இந்த விவாதங்களில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லாதபோதிலும், பல வாரங்களாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுமட்டுமல்லாமல், இன்று பிற்பகலில் கோயல், லோக் பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளார். அப்போது மாநிலத்தில் உள்ள நிர்வாக மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
