கடந்த 12-ம் தேதி நாட்டை மட்டுமில்லாது உலகையே உலுக்கியது ஒரு விமான விபத்து. ஆமதபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில் 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட போயிங் 787-8 டிரீம் லைனர் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பிய சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது.
மருத்துவக்கல்லூரி விடுதியில் விமானம் விழுந்து வெடித்ததில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் இருந்த 241 பேர், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் உள்ளவர்கள் என மொத்தம் 274 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த இந்திய நபர் ஒவர் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
விமானம் வெடித்த விபத்தில் பலர் உடல் கருகி உயிரிழந்ததால், இறந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 நாட்களுக்கும் மேலாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, உடல்கள் அடையாளம் காணப்பட்டது. அந்த வகையில், 3 நாட்களுக்கு பிறகு குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.