வங்காள மொழியை வங்கதேச தேசிய மொழி என டெல்லி காவல்துறை ஒரு கடிதத்தில் கூறியிருப்பதற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை ஒரு கடிதத்தில் வங்காள மொழியை வங்கதேச தேசிய மொழி என குறிப்பிட்டிருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காவல்துறையின் இந்த கடிதத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, ”இது வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கும் செயல்” என கண்டித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தை வைத்து பாஜகவும், மமதா பானர்ஜியும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், வங்காள மொழி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது,
“மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை வங்காள மொழியை ‘வங்கதேச மொழி’ என வர்ணித்துள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடி அவமானம்.. இது தற்செயலான பிழைகள் அல்ல.. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல். அடையாளத்தை ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை இது அம்பலப்படுத்துகிறது. இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்தத் தாக்குதலில், வங்க மொழிக்கு மம்தா பானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார்.” எனக் கூறியிருக்கிறார்.