இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”அவசரநிலை ஒரு தற்காலிக ஒழுங்கை கொண்டு வந்தது என்றும், ஜனநாயக அரசியலின் சீர்குலைவிலிருந்து நிவாரணத்தை வழங்கியது என்றும் சிலர் வாதிடலாம். ஆனால், இந்த விதிமீறல்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் சர்வாதிகாரமாக மாறியதன் விளைவாகும். அவசரநிலையின் போது எந்த ஒழுங்கு தோன்றியிருந்தாலும், அது நமது குடியரசின் ஆன்மாவின் விலையில் வந்தது ஆகும்’ என குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியாவில் அவசர நிலை கொண்டு வந்த இந்திரா காந்தியை 1977-ல் மக்கள் நிராகரித்து பதிலடி கொடுத்தனர் என்றும் தெரிவித்து இருக்கிறார். இன்றைய இந்தியா 1975-ம் ஆண்டு இந்தியா போல இல்லை என கூறியுள்ள சசிதரூர், நாம் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், அதிக வளர்ச்சியடைந்தவர்களாகவும், பல வழிகளில் வலுவான ஜனநாயகமாகவும் இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.

சசிதரூரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ள கருத்தில், ‘சக தலைவர் ஒருவர் பா.ஜனதா குரலில் வார்த்தைக்கு வார்த்தை பேசத்தொடங்கும்போது, ‘பறவை கிளியாக மாறுகிறதா’ என்றுதான் யோசிக்க தோன்றுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சசிதரூர் ’ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருந்தார். இதனால் அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. சசி தரூரின் கருத்துகள் அவருடைய தனிப்பட்ட கருத்துகள் என்றும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version