டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, டெல்லி போலீசார் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR), பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொள்ளுதல், காவல்துறையினரைத் தாக்குதல் மற்றும் சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்சிமாநாட்டின் 5-வது அரங்குக்குள் நுழைவதற்காக முன்னதாகவே ஒரு QR குறியீட்டை உருவாக்கியுள்ளனர். பின்னர், தாங்கள் அணிந்திருந்த வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை ஸ்வெட்டர்களுக்கு அடியில் மறைத்து வைத்துக்கொண்டு ரகசியமாக உள்ளே நுழைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகத் தெரிவதாக ஏசிபி மஹலா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “நிச்சயமாக, ஒரு சில நபர்கள் ஒரே இடத்தில் கூடி இத்தகைய போராட்டத்தை நடத்துகிறார்கள் என்றால், அது முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமல் சாத்தியமில்லை. நாங்கள் இது குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றார். இந்தப் போராட்டம் ஒரு சில தனிநபர்களால் எடுக்கப்பட்ட முடிவா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் ஒரு பெரிய அமைப்போ அல்லது திட்டமோ இருந்து பலரை ஈடுபடுத்தியதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பிப்ரவரி 20, 2026 அன்று மதியம் சுமார் 12:30 மணியளவில், டெல்லி பாரத் மண்டபத்தின் கண்காட்சி அரங்கில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை போராட்டக்காரர்கள் திடீரெனக் காட்சிப்படுத்தினர்.
அவர்களின் டி-ஷர்ட்களில் “PM is compromised,” “Epstein Files,” மற்றும் “India-US trade deal” போன்ற சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ஒருகட்டத்தில் தங்களது மேல் சட்டைகளைக் கழற்றி எறிந்த போராட்டக்காரர்கள், உரக்க முழக்கமிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு குழுமியிருந்த சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
