அசாம் மாநிலத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்திய விமானப்படையின் சுகோய் சு-30எம்கேஐ (Sukhoi Su-30MKI) போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங் பகுதியில் உள்ள சோகிஹோலா அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இந்த விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்து மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானப்படை அதிகாரிகள், உடனடியாக தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் தேடுதல் பணிகள் நடைபெற்ற நிலையில், அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கு அருகிலேயே விழுந்து நொறுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் கடினமான நிலப்பரப்பு கொண்ட பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த திறமையான போர் விமானிகளான அனுஜ் மற்றும் பூர்வேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மறைவு இந்திய விமானப்படைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
இந்தக் கொடூர விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டதா என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளன.
