கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் இதுவரை 274 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் என 242 பேர் பயணம் செய்திருந்தனர். அதில் ஒரு இந்தியர் தவிர்த்து 241 பேர் உயிரிழந்தனர். நேற்று(15.06.2025) விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரையிலும், 47 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து கேதர்நாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 1 குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது உத்திரபிரதேசத்தில் ஹஜ் பயணிகள் சென்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது மேலும் பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (16.06.2025) அதிகாலை 6.30 மணியளவில் ”சவுதியா ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான SV 3112 ஏன்ற விமானம் தரையிறங்கியது. நேற்று இரவு புறப்பட்ட இந்த விமானத்தில் 250 ஹஜ் பயணிகள் இருந்தனர். இந்த விமானம் லக்னோவில் தரையிறங்கிய போது, விமானத்தின் இடதுபக்க சக்கரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனையடுத்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தப்பட்டு, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய அவசரகால மீட்புக் குழுவினர், சுமார் 20 நிமிடங்களுக்குள் தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹைட்ராலிக் கசிவால் விமானத்தின் சக்கர அமைப்பில் அதீத வெப்பம் ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.