இந்தியாவின் வீரமிக்க ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த வீரதீர விருது (Gallantry Medals) பெற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணச் சலுகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சலுகையானது, குறிப்பிட்ட சில பிரிவுகளைச் சேர்ந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்; இது நாட்டின் சீருடை அணிந்த வீரர்களுக்கான ஒரு முக்கிய நலத்திட்ட முயற்சியாக அமைகிறது.
இச்சலுகையைப் பெற யார் தகுதியுடையவர்கள்? மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிகளின்படி, ஆயுதப் படைகளைச் சேர்ந்த, வீரதீர விருதுகளைப் பெற்றுள்ள அனைத்துப் பணியாளர்களும் இதில் அடங்குவர்.
துணைவர்கள்: மறைந்த விருது பெற்றவர்களின் மனைவி அல்லது கணவர் (Spouse), ஆகியோர் மறுமணம் செய்து கொள்ளும் வரை இந்த இலவச ரயில் பயணச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.”
பெற்றோர்: “விருது பெற்ற வீரர் திருமணமாகாதவராக இருந்து, அவருக்கு மறைவுக்குப் பின் (Posthumously) விருது வழங்கப்பட்டிருந்தால், அவரது பெற்றோர்கள் இந்த இலவச ரயில் பயணச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.”
“அசாத்தியமான வீரத்தை (Extraordinary Courage) வெளிப்படுத்தியவர்களின் குடும்பங்கள், தொடர்ந்து அரசிடமிருந்து உரிய அங்கீகாரத்தையும் ஆதரவையும் பெறுவதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.”
தகுதிபெறும் பயண வகுப்புகள்: இந்த புதிய வசதியின் கீழ், பயனாளிகள் இந்திய இரயில்வேயில் தங்களது வாழ்நாள் முழுவதும், ஒரு துணையுடன் இணைந்து இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இவ்வசதி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஏசி (AC), ஏசி இருக்கை வசதிப் பெட்டி (AC Chair Car) பயண வகுப்புகளுக்குப் பொருந்தும்.
நாட்டின் விருதுபெற்ற வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கண்ணியமான மற்றும் வசதியான பயண வசதிகளை வழங்குவதையே இச்சலுகை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவக் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீர விருதுகள்: இந்தியாவின் வீர விருதுகள் என்பவை, ஆயுதப்படை வீரர்கள் தங்கள் கடமையின்போது வெளிப்படுத்தும் இணையற்ற வீரம், துணிச்சல் மற்றும் தியாகங்களுக்கு தேசம் அளிக்கும் மிக உயர்ந்த அங்கீகாரமாகும். போர்ச் சூழல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற சவாலான பணிகளின்போது வெளிப்படுத்தப்படும் வீரச் செயல்களைச் சிறப்பிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இவ்விருதுகளில், பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா மற்றும் சௌர்ய சக்ரா ஆகியவை அடங்கும்.
இவை போர்க்களத்தில் வெளிப்படுத்தப்படும் வீரத்தை மட்டுமல்லாமல், போர்க்களத்திற்கு அப்பால் வெளிப்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க துணிச்சலையும் அங்கீகரிக்கின்றன. நாட்டைக் காப்பதற்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைப்பவர்களிடம் இந்தியா கொண்டுள்ள நன்றியுணர்வின் அடையாளமாக ஒவ்வொரு பதக்கமும் திகழ்கிறது; மேலும், இவை தேசத்தின் வீரர்களின் அசைக்க முடியாத மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன.
