பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 சிறாருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று தேசிய சிறார் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 20 சிறார்களையும் சந்தித்து பிரதமர் மோடி பேசியதாவது:
சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் பாபா சோராவார் சிங் (9), பாபா பதே சிங் (6) ஆகியோர் முகலாய படை வீரர்களால் கடத்தப்பட்டனர். இரு குழந்தைகளையும் மதம் மாறச் சொல்லி முகலாய ஆட்சியாளர்கள் நிர்பந்தம் செய்தனர். வீரம்மிக்க இரு சிறுவர்களும் மதம் மாற மறுத்துவிட்டனர். கடந்த 1704-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரு சிறுவர்களும் உயிரோடு புதைக்கப்பட்டனர். அவர்களின் வீர மரணத்தின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 26-ம் தேதி வீர பாலகர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பேருக்கு தேசிய சிறார் விருது வழங்கப்பட்டு உள்ளது.
நமது நாடு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இளைஞர்களின் நலனில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. அவர்களுக்கு திறன்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. விண்வெளி, நிதிச்சேவை தொழில்நுட்பம், உற்பத்தி துறை உட்பட அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் ஜென் இசட், ஜென் ஆல்பா தலைமுறையினர் மிகுந்த அறிவாளிகள். அவர்களின் திறமை, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு வியப்பளிக்கிறது. அடல் டிங்கரின் ஆய்வகங்கள் மூலம் மாணவ, மாணவியர் ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபட ஊக்கம் அளிக்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் கற்றல் திறன் அதிகரிக்கிறது.
இந்தியாவின் எதிர்காலம் இளம் தலைமுறையினர் கையில் உள்ளது. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த லட்சியத்தை நோக்கி ஜென் இசட் (1997 முதல் 2012-க்குள் பிறந்தவர்கள்), ஜென் ஆல்பா (2010 முதல் 2024-க்குள் பிறந்தவர்கள்) தலைமுறையினர் நமது நாட்டை வழிநடத்துவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சந்தாலி மொழியில் அரசியலமைப்பு சட்டம்: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார்.
2003-ம் ஆண்டின் 92-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சந்தாலி மொழி சேர்க்கப்பட்டது. ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கணிசமான பழங்குடி மக்களால் இம்மொழி பேசப்படுகிறது.
நாம் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டோம் என்பது நாடாளுமன்றத்தில் தெளிவாக உணர்த்தப்பட்டது. அண்மையில் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் இந்தி, ஆங்கிலத்தை தவிர்த்து இந்திய மொழி களில் 160 உரைகள் நிகழ்த்தப்பட்டன.
