மௌனம் உங்களை காப்பாற்றாது, இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள் என்று நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது. இரண்டு பத்திரிகை அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இந்திய தூதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்று, உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நலன் காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், வங்க தேச வன்முறைக்கு எதிராக, முதல் பிரபலமாக நடிகை காஜல் அகர்வால் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வங்கதேசத்தில் எரித்து கொல்லப்பட்ட தீபு சந்திரதாஸ் என்பவர் குறித்த போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் அனைத்து கண்களும் வங்காளதேச இந்துக்களின் மீது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மௌனம் உங்களை காப்பாற்றாது இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
