“பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடாதது மக்களால் தவறாக கருதப்பட்டிருக்கலாம். எங்கள் கட்சி 4%-க்கும் குறைவான வாக்குகளைப் பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டு 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. மேலும், அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தலில் போட்டியிடவில்லை என்ற எனது முடிவு தவறாக நினைக்கப்பட்டிருக்கலாம். தேர்தலில் வெற்றிகரமான முடிவைப் பெற நாம் நிறைய உழைக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி 4 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத் தேர்தல்களில் வெற்றி பெற எனது முயற்சி தொடரும். பிஹாரில் வெற்றி பெறாமல் நான் பின்வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று எனக்குத் தெரியவில்லை.

தேர்தலுக்கு சற்று முன்பு, பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அரசாங்கம் ஒவ்வொரு தொகுதியிலும் 60,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்காவிட்டால், அவரது அரசாங்கம் வெறும் 25 இடங்கள் கூட வெற்றி பெற்றிருக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மக்களின் பணத்தில் ரூ.40,000 கோடியை மட்டுமே அவர்களுக்கு வழங்கியுள்ளது. அதில் பெரும்பகுதியை தேர்தலுக்கு சற்று முன்னதாகவே வழங்கியுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version