இந்தியாவில் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 2029-ஆம் ஆண்டிற்குள் 15 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானாந்தா சோனாவால் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னை துறைமுகத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானாந்தா சோனாவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் முதன்முறையாகவும் உலகளவில் இரண்டாவது முறையாகவும் நடைபெறும் இந்த மாநாடு, கப்பல் பயணிகளின் போக்குவரத்தை மேம்படுத்தவும் சுற்றுலாவின் வளர்ச்சிக்கும் உதவும் என்றார். தற்போது 5 லட்சம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டில் மட்டும் 15 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சர்பானந்தா தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் தொடர் முயற்சியின் மூலமாக அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கப்பல் போக்குவரத்துத்துறையும் புதிய மைல்கல்லை எட்டிவருவதாக அவர் கூறினார். வெளிநாட்டு பயணிகளுக்கும் தேவையான வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கப்பல் கட்டுமானத்தில் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா, விரைவில் முதல் 5 இடங்களுக்குள் வரும் என்றும் ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கி, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்தார்.
