பிரதமர் மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா – அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தத்திற்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெராம் ரமேஷ் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
1. இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாது. இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
2. இந்திய விவசாயிகளின் நலனைப் பலிகொடுத்து, அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்தியா இறக்குமதி வரிகளைக் குறைக்கும்.
3. அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.
4. அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும்.
5. அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் நெருக்கம் காட்டுவதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. மோடியின் அமெரிக்கப் பயணத்தைவிட, ட்ரம்ப்பின் இந்திய பயணம் வெற்றி பெற்றுவிட்டது. நண்பன் (ரஷ்யா) இனி நண்பன் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
