இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெறும் விமான சேவைகளில் ஏற்படும் கோளாறுகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. அதனை தொடர்ந்து கேதர்நாத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
அதனை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கிய சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹஜ் பயணிகளை ஏற்றி வந்த விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் இடதுபுற சக்கரத்தில் இருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, 250 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து லே விமான நிலையத்திற்கு இன்று காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பின்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மீண்டும் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து டெல்லியில் அவசரமாக தரையிரக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆமதபாத் விமான விபத்தை தொடர்ந்து கடந்த 7 நாட்களில் இந்தியாவில் அதிக அளவிலான விமானங்கள் தொழில் நுட்பக் கோளாறால் பாதிக்கப்படுவது பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.