2025ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்த பிரம்மாண்ட பங்கேற்பு கின்னஸ் சாதனையாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை காலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சி, விசாகப்பட்டினத்தின் ஆர். கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை சுமார் 26 கிலோமீட்டர் நீளமுள்ள நடைபாதையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோரும் யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர்.

கின்னஸ் சாதனை முயற்சி:

ஆந்திர மாநில அரசு, இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பதிவு செய்துள்ள பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்றதால், விசாகப்பட்டினம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சர்வதேச யோகா தினம்: ஒரு சுருக்கப் பார்வை

யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த யோசனையை அடுத்து, 177 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் டிசம்பர் 11, 2014 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.

2015ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச யோகா தினம், இந்த ஆண்டு “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா” (Yoga for One Earth, One Health) என்ற கருப்பொருளுடன் 11வது முறையாக கொண்டாடப்பட்டது. யோகா என்பது உடலையும் மனதையும் ஒன்றிணைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியையும், நல்லிணக்கத்தையும் அளிக்கும் ஒரு பழமையான இந்தியக் கலையாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version