ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதில் இருந்து நாட்டின் பாெருளாதாரம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்து இருப்பது தெளிவாக தெரிவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி மத்திய பாஜக அரசை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இது நமது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது. நமது நாடு வளர்ந்து வருகிறது, நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என அவர்கள் (மத்திய அரசு) எப்போதும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரூபாய் மதிப்பு சரிவதை வைத்து, நாட்டின் புொருளாதாரம் எந்த நிலையில் மோசமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உலகில் நமது நாட்டின் ரூபாய்க்கு எந்த மதிப்பும் இல்லை. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம். ஏனெனில் மத்திய அரசின் கொள்கை சரியாக இருந்திருந்தால், அதன் மதிப்பும் நல்ல நிலையில் இருந்திருக்கும்.
பாபர் மசூதி விவகாரத்தில் ஜவஹர்லால் நேரு மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஜவஹர்லால் நேரு மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், அதை அவர்கள் (பாஜக) வெளியிடலாம்.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
