ராஜ்யசபாவில் இருந்து ஓய்வுபெறும் 37 உறுப்பினர்களுக்கு இன்று வழிஅனுப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றுகையில், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா குறித்து மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். “எனக்கு தேவகவுடாவை கடந்த 54 ஆண்டுகளாகத் தெரியும். அவர் ஆரம்பத்தில் எங்களை (காங்கிரஸ்) மிகவும் நேசித்தார்; ஆனால் இறுதியில் பிரதமர் மோடியை மணந்து (கூட்டணி) கொண்டார்” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
கார்கேவின் இந்த கலகல பேச்சால், அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அனைத்துக் கட்சி எம்.பி-க்களும் சிரிப்பால் அதிர்ந்தனர். அரசியல் ரீதியாகக் கடும் விமர்சனங்களை முன்வைக்கும் கார்கே, ஒரு மூத்த தலைவரின் அரசியல் பயணத்தை இவ்வளவு கலகலப்பாக விவரித்தது அவையில் சிரிப்பலையை உருவாக்கியது. “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை” என்பதற்கு இந்தத் தருணம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது.
முன்னதாக, 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் தேவகவுடாவின் ஜே.டி.எஸ் (JDS) கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைத்தன. ஆனால், உட்கட்சிப் பூசல்களால் ஓராண்டிலேயே அந்த ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஜே.டி.எஸ் கட்சி பாஜக தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இணைந்தது. இந்த அரசியல் மாற்றத்தையே கார்கே சுட்டிக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.
