பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005ஆம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக ‘ வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) ‘ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த நிலையில் விபி ஜி ராம் ஜி என்று பெயரிடப்பட்ட அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில், மோடி அரசின் MNREGA எனப் பெயர் மாற்றும் முடிவை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தாக்கி வருகிறது. பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் எதிர்வினைகளைத் தொடர்ந்து, சசி தரூரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “கிராம சுயராஜ்ஜியமும் ராம ராஜ்ஜியமும் காந்திஜியின் கனவின் இரண்டு தூண்கள். அவற்றுக்கிடையே ஒருபோதும் மோதல் இல்லை.
கிராமப்புற ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்திலிருந்து மகாத்மாவின் பெயரை நீக்கி அவரது மரபை அவமதிக்காதீர்கள். அவரது கடைசி வார்த்தை ‘ராம்’. தேவையில்லாமல் ஒரு சர்ச்சையை உருவாக்கி அவரது ஆன்மாவை சேதப்படுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
