குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிக் கிளம்பிய ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட ஐந்தே நிமிடங்களில் குடியிருப்புப் பகுதிக்குள் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தின் பின்னணி, விசாரணை அமைப்புகளால் ஆராயப்பட்டு வருகிறது. இந்த வேளையில், இந்தியாவில் இதற்கு முன் நடந்த சில விமான விபத்துகளை மீள்பார்வையிடலாம்.
இந்தியாவில் விமான விபத்துகள்
இந்தியாவில் நிகழ்ந்த முதல் விமான விபத்து 1938-ம் ஆண்டு நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 7 1938-ம் ஆண்டு வியட்நாமிலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற பிரெஞ்சு விமானம் மத்திய பிரதேசம் அருகே நடுவானில் விபத்துக்குள்ளானது. அதில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் 1949-ம் ஆண்டு இந்தோனேஷிய விமான விபத்தில் 49 பேரும், 1962-ம் ஆண்டு ஆஸ்திரேலிய விமான விபத்தில் 94 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்னும் குறிப்பிடத்தக்க சர்வதேச பயணம் மேற்கொண்ட விமானங்கள் இந்திய எல்லைக்குள் விபத்தைச் சந்தித்துள்ளன.
இந்தியாவின் பெரும் விபத்துகள்
மே 31, 1973 – சென்னையிலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் 440 என்ற விமானம், டெல்லியில் தரையிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. விமானத்தில் 65 பேர் மட்டுமே இருந்த நிலையில், அதில் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குறிப்பாக, அப்போதைய மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் இந்த விபத்தில் உயிர்துறந்தார்.
ஜனவரி 1, 1978 – மும்பையிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே நடுவானில் விபத்துக்குள்ளாகி அரபிக் கடலில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 213 பயணிகளும் பலியாகினர். திசை அறியும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 19, 1988 – மும்பையிலிருந்து ஆமதாபாத்திற்குப் பறந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113, தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விமான ஓடுதள பாதையில் கட்டுப்பாட்டை மீறி ஓடி, மரங்களில் மோதியது. இந்த விபத்தில், 133 பேர் பலியாகினர். தரையிறங்க பாதுகாப்பான உயரத்தை மீறிக் கீழே பறந்ததுதான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பிப்ரவரி 14, 1990 – மும்பையிலிருந்து பெங்களூரு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605, தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து, விமான ஓடுதளத்திலிருந்து அருகிலிருந்த கோல்ஃப் மைதானம் வரை இழுத்துக்கொண்டு போய் தீப்பிடித்தது. ஏர்பஸ் ரக விமானத்தில் பயணித்த 146 பயணிகளில் 92 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 16, 1991 – கல்கத்தாவிலிருந்து மணிப்பூர் மாநிலம் இம்பாலாவுக்குச் சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257, புறப்பட்ட பின் ஏற்பட்ட தொலைத் தொடர்பு கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 69 பேரில் 62 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
நவம்பர் 12, 1996 – டெல்லியிலிருந்து சவுதி அரேபியா நோக்கிச் சென்ற சவுதி ஏர்லைன்ஸ் 763 விமானமும் கசகிஸ்தானிலிருந்து டெல்லி நோக்கி வந்த கசகிஸ்தான் ஏர்லைன்ஸ் 1907 விமானமும் நடு வானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இது இந்தியாவின் மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படுகிறது. இதில், இரு விமானங்களில் இருந்த 349 பேரும் உயிரிழந்தனர்.
ஜூலை 17, 2000 – கல்கத்தாவிலிருந்து டெல்லி நோக்கி வந்த அலையன்ஸ் ஏர் 7412 என்ற விமானம், பாட்னாவில் முதல் இடைநிறுத்தத்திற்காகத் தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாய்ந்தது. இவ்விபத்தில் விமானத்தில் இருந்த 60 பேர் உயிரிழந்தனர்.
மே 22, 2010 – துபாயிலிருந்து கர்நாடகாவின் மங்களூரு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 812 விமானம், தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விமானத்திற்குள் இருந்த 166 பயணிகளில் 158 பேர் பரிதாபமாகப் பலியாகினர். சுற்றுப்பாதை எச்சரிக்கையை கேப்டன் கவனிக்கத் தவறியதால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 7, 2020 – துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 1344 விமானம், கனமழை காரணமாக தரையிறங்கும்போது சக்கரம் வழுக்கி விபத்துக்குள்ளானது. ஏற்கெனவே 2 முறை தரையிறங்கும் முயற்சிகள் தோல்வியடைந்து 3-வது முறையாக இறங்கும்போது விபத்தை எதிர்கொண்டது. விமானத்தில் இருந்த 159 பேரில் 21 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
இந்தியாவில் நிகழ்ந்த பெரும்பாலான விபத்துகளின் பின்னணியில் தொழில்நுட்பம் கோளாறு, கவனக்குறைவு, விமானக் கட்டுப்பாடு இழந்தது ஆகியவையே காரணம் என்பது தெரியவருகிறது. தற்போது அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தின்போதும், வானிலை தெளிவாக இருந்ததாகவும், விமான வானிலை முன்னறிவிப்பின்படி மேற்பரப்பில் காற்று குறைவாகவும், தெரிவுநிலை (visibility) நன்றாக இருந்ததாகவும், குறிப்பிட்ட அளவில் மேகங்கள் காணப்பட்டதற்கான பதிவுகளோ இல்லை எனவும் விமான வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
