இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – சுகாதாரத்துறை தகவல்
2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2025-26-ம் கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான (இளங்கலை மருத்துவ படிப்புகள்) இடப்பங்கீட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிட்டு பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு முடிவு வெளியாவது தாமதம் ஏற்படும் போது, மாணவர்களின் விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் மிகவும் குறைவதால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால், இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் 12-ம் வகுப்பு இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் பெறப்பட்டால் மாணவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதுடன், விண்ணப்பங்கள் சரி பார்ப்பதற்கும் அதிக கால அவகாசம் இருக்கும் என்று சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது
இந்த நிலையிம் தான் இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே நாளை முதல் இளங்கலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனவும், மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய முடியாதோ என்ற சந்தேகம் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களின் விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் எனவும், அந்த கால அவகாசம் 5 நாட்கள் இருக்கும் என்று அறிவித்துள்ளது.