மும்பையில் தனியார் பேருந்து மோதி சாலையோரம் நின்ற 4 பயணிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை புறநகர் பகுதியான பாண்டுப் என்ற இடத்தில் நேற்றிரவு 10 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்த காட்சிகள், அப்பகுதியில் இருந்த துணிக்கடை ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பயணிகள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த நிலையில், பேருந்து ஒன்று திடீரென வேகமாக பின்னோக்கி வந்தது.
இதையடுத்து, பயணிகள் பதறி அடித்துக்கொண்டு சிதறி ஓடினர். பலர், அருகில் உள்ள கடைக்குள் நுழைந்தனர். எனினும், வேகமாக வந்த பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் கண் முன்பாகவே இந்த பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுவிட்டார். விபத்து குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி எடுத்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து, ஒலெக்ட்ரா கிரீன்டெக் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த பேருந்தை BEST நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
