இந்தியாவில் உள்ள தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று நேற்று சென்னையில் விழிப்புணர்வு நடந்தது. தெருநாய்களை பாதுகாக்கக்கோரி சென்னை எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் ( Heaven for Animals ) என்ற என்ஜிஓ சார்பாக அமைதியான முறையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் நடிகை நிவேதா பெத்துராஜ், நடன இயக்குநர் ராபர்ட் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் நிவேதா பெத்துராஜ், “யாரையாவது ஒரு தெரு நாய் கடித்து விட்டால் அதை பயமுறுத்தும் செய்தியாக சொல்ல வேண்டாம். நீங்கள் அதை பயமுறுத்தும் விதமாக சொல்கிறீர்கள் அது தவறு. நாய் கடிப்பது சரி என்று நான் சொல்லவில்லை. நாய் கடிப்பதன் மூலமாக ராபிஸ் நோய் தொற்று பரவுவது நம் அனைவருக்கும் தெரியும்.
செய்தியாளர்களாக நீங்கள் ஒரு நாய் யாரேனும் ஒருவரை கடித்து விட்டால் அதை பயமுறுத்தும் நோக்கத்தில் சொல்லாமல் அதற்கான தீர்வு என்ன இனி இது போல் நடக்காமல் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். முறையான தடுப்பூசியை தெரு நாய்களுக்கு செலுத்தி அவைகளை பராமரிப்பதன் மூலம் இது போன்ற நோய் தொற்று வர வாய்ப்பு இல்லை என்று சொல்லி பழகுங்கள்.
மனிதர்களாகி நாம் யாரேனும் ஒருவர் தவறு செய்து விட்டால் அதை திருத்துவோம். தவறு செய்த அந்த நபரை நாம் கொள்வதில்லை, அந்த தவறை செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டி அந்த தவறை திருத்துவோம். அதையே விலங்குகளுக்கும் செய்ய வேண்டும் என்று நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

நிவேதா பெத்துராஜ் தெருநாய்கள் மீது இவ்வளவு அக்கறையாக பேசியது குறித்து மக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தெரு நாய்கள் அனைத்தையும் சரியாக கையாண்டு அவைகளுக்கு தடுப்பூசி செலுத்தி சரியான முறையில் பராமரிக்கவும் வேண்டுகோள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

