2025 நவம்பர் மாதம் நாட்டின் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.70 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நடப்பாண்டு நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வரி வசூலை, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, 0.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 276 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளநிலையில், இது, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சற்று குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஜி.எஸ்.டி. வரி வசூல் 14 லட்சத்து 75 ஆயிரத்து 488 கோடி ரூபாயாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அருணாச்சலபிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்துள்ளதாகவும், மகாராஷ்டிராவில் 3 சதவீதமும், கர்நாடகாவில் 5 சதவீதமும், கேரளாவிலும் 7 சதவீதமும் வரி வசூல் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 7 சதவீதமும், தமிழகத்தில் 4 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 7 சதவீதமும், மத்தியப்பிரதேசத்தில் 8 சதவீதமும், மேற்குவங்க மாநிலத்தில் 3 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி வசூல் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 1ம் தேதியன்று, முந்தைய மாதத்தின் வரி வசூல் விவரங்களை மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜி.எஸ்.டி. வரி அடுக்குகளை மாற்றி அமைத்த மத்திய அரசு, நூற்றுக்கணக்கான பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியையும் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
