ஒடிசாவைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், ஒடிசாவில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
சுரங்க தொழிலதிபர் ரதிகாந்தா ராவத் என்பவருக்கு எதிரான புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்க, அமலாக்கத்துறை துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக ரதிகாந்தா ராவத் புகார் அளித்தார்.
இது குறித்து ரதிகாந்தா ராவத் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, லஞ்சப்பணம் ரூ.2 கோடியில் முதல் தவணையாக ரூ.50 லட்சத்தை வியாழக்கிழமை மாலைக்குள் இடைத்தரகர் ஒருவரிடம் செலுத்த வேண்டும் என்று சிந்தன் ரகுவன்ஷி கூறியதாக ரதிகாந்தா ராவத் தெரிவித்தார்.
இதன்படி, ரதிகாந்தா ராவ் இடைத்தரகர் ஒருவரிடம் லஞ்சப்பணத்தைச் செலுத்தியபோது, சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த இடைத்தரகரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத்துறை அதிகாரி சிந்தன் ரகுவன்ஷியும் கைது செய்யப்பட்டு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைக்குப் பிறகு, சிந்தன் ரகுவன்ஷியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்படவில்லை என்றும், அந்த மனு ஜூன் 4-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.