தாய்லாந்தைச் சேர்ந்த Opal Suchata மிஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
72-வது ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகிப் போட்டி மே 10-ஆம் தேதி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் 109 நாடுகளில் இருந்து அழகிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் நந்தினி குப்தா கலந்து கொண்டார்.
போட்டியின் நடுவே ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இங்கிலாந்து சார்பில் பங்கேற்ற மில்லா மாகி என்ற அழகி உடல்நலக் குறைவு காரணமாகப் போட்டியில் இருந்து விலகினார். அவரை சொந்த ஊர் அனுப்பி வைத்த பிறகு, போட்டி அமைப்பாளர்கள் தன்னை கண்ணியமாக நடத்தவில்லை என்றும், பாலியல் தொழிலாளி போல நடத்த முயற்சித்ததாகவும் மில்லா மாகி குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்தாலும், இங்கிலாந்து அழகியின் புகார் குறித்து விசாரிக்க தெலுங்கானா அரசு ஒரு குழுவை அமைத்தது. மில்லா மாகி விலகிய நிலையில், இங்கிலாந்து சார்பில் மற்றொரு அழகி போட்டியில் பங்கேற்றார்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அழகிகளுக்கிடையே விளையாட்டு, தனித்திறமை, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 14 பேர் காலிறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளனர். தனித்திறன் போட்டியில் இந்தோனேசிய அழகி மோனிகா கேசியாவும், நடனப் போட்டியில் இந்திய அழகி நந்தினி குப்தாவும் முதலிடம் பெற்றனர்.
தெலுங்கானாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 200 சிறுவர், சிறுமிகளுடன் அழகிகள் ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், சிறுவர், சிறுமிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆதரவற்றோருடன் நடனமாடிய நந்தினி குப்தா சிறுமிகளிடம் “நீங்கள் ஆதரவற்றோர் இல்லை. நாங்களும் உங்கள் குடும்பம்தான்” என்று கூறினார்.
72-வது உலக அழகிப் போட்டிக்கான இறுதிச்சுற்று இன்று மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தாய்லாந்தின் Opal Suchata மிஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.