தமிழ்நாட்டில் அக்னி வெயில் இன்னும் முடியவில்லை. வரும் 28-ம் தேதி வரை அக்னி வெயிலின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.

அந்த வகையில் பெங்களூருவில் நேற்று முன் தினம் (18.05.2025) இரவில் பெய்யத் தொடங்கிய மழையானது விடாமல் கொட்டித் தீர்த்தது. மறுநாள் காலை வரை கொட்டிய மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.

குறிப்பாக ஜெயநகர், ஜக்கசந்திரா, கோரமங்கலா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மழைநீர், வெள்ளம் மின்விநியோகம் பாதிப்பு என மக்கள் கடும் அவதி அடைந்தனர். மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கி 63 வயது முதியவர், 12 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் 35 வயது பெண்மணி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் மற்றும் வெள்ளத்தில் தத்தளித்தவர்கள் சிறிய வகை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகல்கோட், பெலகாம், சிக்கல்லபுரா, தார்வாட், கடக், கொப்பல், கோலார், விஜயநகரா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version