பாராளுமன்றத்தில் நாடகம் செய்ய வேண்டாம் என்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது, மொத்தமுள்ள 243 இடங்களில் 202 இடங்களை வென்றது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நாடாளுமன்றம் அமைதியாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடு, பீகார் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய ஜனநாயகத்தின் சக்தியை வெளிப்படுத்துவதாகவும், பெண்களின் பங்கேற்பை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் முடிவுகளால் சோர்வடைய வேண்டாம் என்றும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பீகார் தேர்தல் முடிவுகளை மனதில் வைத்து பிரச்சினை எழுப்பக்கூடாது அவர் தெரிவித்தார்.மக்களின் பிரச்சினைகள் குறித்தே எதிர்க்கட்சிகள் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்றத்தில் டிராமா வேண்டாம் என்றும் அமளிகளை நாடாளுமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது என்றும் நாடாளுமன்றத்தை அரசியலுக்காக பயன்படுத்தாமல் ஜனநாயகத்தை காக்க எதிர்கட்சிகள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோஷங்களை எழுப்புவதை விட கொள்கைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது என்றும், எனவே, தோல்வியால் விரக்தியை வெளிப்படுத்தும் தளமாக இதைப் பயன்படுத்தக்கூடாது என்றும் பிரதமர் மோடி கூறினார். எதிர்க்கட்சிகள் கூட்டுறவு அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், நாடாளுமன்றம் அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான இடமல்ல, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான இடமாகும் என்றார்.