உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளத்தில் இந்த ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கைகளில் பிரதமர் தீவிரம் காட்டினார். இப்போது அங்கு அமைதி திரும்பி உள்ள நிலையில், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம். நில அதிர்வு மற்றும் பலத்த சூறாவளிக் காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரயில் மற்றும் வளைவு பாலமாகும். இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரமும் கொண்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அளவு வரை நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டது. பூகம்பத்தையும் தாங்கும் இந்தப் பாலம், இது 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாகவும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தை தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 260 கி.மீ வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் வகையிலும், அதிக தீவிரம் கொண்ட பூகம்பங்களைத் தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்தப் பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்தப் புதிய பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணி நேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர் பகல் 12 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. அதைத்தொடர்ந்து, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.