தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வரும் 21 முதல் 23ம் தேதி வரை 3 நாட்கள் ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், இதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்வதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநாட்டில் நடைபெற உள்ள 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளதாகவும், அந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி 20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
