இந்த வாரத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட விக்சித் பாரத்—கேரண்டி ஃபார் ரோஸ்கார் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமீன்) (VB-G RAM G) மசோதா, 2025-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக, ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மத்திய புதிய மசோதா ஒன்றை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது. இதற்கு ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என்றும் பெயர்மாற்றம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு.
இருப்பினும் தொடர்ந்து இந்த முடிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து, இந்த முடிவை அரசு கைவிடவேண்டும் என தெரிவித்தனர். இருப்பினும் இந்த முடிவை மத்திய அரசு கைவிடவில்லை. இதனிடையே மேற்குவங்க மாநில ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பேரை சூட்டினார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
