உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் ஆண்டு உச்சி மாநாடு, இந்த ஆண்டு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன் தினம் கோலாகலமாகத் தொடங்கியது. இன்றுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில், விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா சென்றுள்ளார். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கால்கரி நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் கனடா அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது, இந்தியாவின் உலகளாவிய முக்கியத்துவத்தையும், சர்வதேச உறவுகளில் இந்தியாவின் பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
